இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்களின் இராஜினாமாவை விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அதன் நிர்வாகம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விளையாட்டுத் துறை அமைச்சின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
1973-ஆம் ஆண்டின் 25-ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34-ஆம் பிரிவுகளின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் தற்காலிகமாக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேலதிக ஏற்பாடுகள் செய்யப்படும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்கும்.
விளையாட்டுத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிவதற்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குள் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் வரும் நாட்களில் ஒரு குழு நியமிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமைத்துவம் இன்று காலை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


