நுவரெலியா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுப்பாடின்றி வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளால் வாகனப் போக்குவரத்துக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குதிரைவண்டிச் சேவைகள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மட்டக்குதிரைகள், முறையான கண்காணிப்பின்றி வீதிகளுக்குள் நுழைவதால் வாகனச் சாரதிகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த 13 ஆம் திகதி நுவரெலியா பகுதியில் வீதியொன்றில் பயணித்த மோட்டார் வாகனத்தின் டாஷ்போர்ட் கெமராவில் பதிவான காட்சிகளில், திடீரென வீதிக்குள் நுழைந்த மட்டக்குதிரை யொன்றினால் வாகனம் விபத்துக்குள்ளாகும் சம்பவம் பதிவாகியுள்ளது.
இது தனிப்பட்ட சம்பவம் அல்ல எனத் தெரிவிக்கும் மக்கள், இதற்கு முன்னரும் நுவரெலியா நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள வீதிகளில் குதிரைகள் திடீரெனக் குறுக்கிட்டதால் பல்வேறு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். சில சம்பவங்களில் வாகனங்களுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டதுடன், நபர்கள் காயமடைந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா முக்கிய சுற்றுலா நகரமாக விளங்குவதால், சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்குக்காகக் குதிரைச் சவாரி உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும், இந்நநடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முறையான விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆர்.எப்.எம். சுஹெல்

