கோலாலம்பூர்:
உள்ளூர் அமலாக்கப் பிரிவு ஒன்றில் வாகனங்களின் உரிமையாளர் ஆவணங்களைப் போலியாகத் தயாரித்த விவகாரம் தொடர்பில் நிறுவன உரிமையாளர் ஒருவரும், கார் இடைத்தரகர் ஒருவரும் வரும் செப்டம்பர் 21 வரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
30 மற்றும் 40 வயதுடைய இவ்விரு நபர்களும், வாகன உரிமையாளர் ஆவணங்களை மாற்றுவதற்காக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) விண்ணப்பத்தை ஏற்று, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்ற மாஜிஸ்திரேட் S. S. எவாஞ்சலின் இத்தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக பேராக் MACC அலுவலகத்திற்கு வந்திருந்தபோதே இவ்விரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
சாலைப் போக்குவரத்துத் துறையுடன் (JPJ) இணைந்து நடத்தப்பட்ட விசாரணையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகன உரிமையாளர் அந்தஸ்தை மாற்றும் மோசடிக் கும்பலின் நடமாட்டத்தை MACC வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
இச்சம்பவம் MACC சட்டம் 2009-ன் பிரிவு 18-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதைப் பேராக் MACC இயக்குநர் அஜீசுல் அகமட் சார்காவி உறுதிப்படுத்தியுள்ளார்.



