தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகிதியபா (47) காலமானதாக அரச குடும்பம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 12 அன்று அவரது மறைவை அரச அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
‘இளவரசி பா’ (Princess Bha) என்று அழைக்கப்படும் இவர், டிசம்பர் 2022-இல் தனது நாய்களுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அன்று முதல் கோமா நிலையில் இருந்த அவர், சிகரெட்ச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் மன்னர் வஜிரலோங்கோர்னின் முதல் மனைவியான இளவரசி சோம்சாவளிக்கு பிறந்த ஒரே மகள் ஆவார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான நக்கோன் ராட்சசிமாவில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, அவருக்கு மைகோபிளாஸ்மா (Mycoplasma) தொற்று காரணமாக இதயத்தில் தீவிரமான சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அரச அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், “இளவரசிக்குக் கடுமையான வயிற்றுத் தொற்று மற்றும் குடல் அழற்சி (Colitis) ஏற்பட்டு, இரத்த அழுத்தம் குறைந்ததால் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. மருத்துவக் குழுவினர் அவருக்கு மிகவும் நெருக்கமான மற்றும் தீவிரமான சிகிச்சைகளை வழங்கிய போதிலும், அவரது உடல்நிலை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. இறுதியில் அவர் வியாழன் மாலை மருத்துவமனையில் அமைதியான முறையில் உயிர்நீத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


