Last Updated:
கடந்த 5 ஆண்டுகளாக மாங்காயின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால், பல தலைமுறைகளாக பராமரித்து வந்த 140 ஆண்டுகள் பழமையான மாமரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. “மாங்கனி நகரம்” என அழைக்கப்படும் கிருஷ்ணகிரியின் மா சாகுபடியை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகளவில் மா சாகுபடி நடைபெறும் மாவட்டமாக கிருஷ்ணகிரி விளங்குகிறது. மாவட்டத்தில் தற்போது சுமார் 33 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, பர்கூர், மத்தூர், போச்சம்பள்ளி, இராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெங்களூரா, நீலம், பீத்தர், மல்லிகா, அல்போன்சா, மல்கோவா உள்ளிட்ட 12 வகையான மா ரகங்கள் பயிரிடப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் மாங்காய்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் மெட்ரிக் டன் மாங்காய்கள் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக மாங்காயின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள புளியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்ற விவசாயி, தனது 2 ஏக்கர் நிலத்தில் 140 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட மாமரங்களை வெட்டி அகற்றி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பல தலைமுறைகளாக குடும்ப உறுப்பினர்களைப் போல பாதுகாத்து வந்த மாமரங்களை வேறு வழியின்றி வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மா சாகுபடியை என்னுடைய தலைமுறையோடு நிறுத்திக் கொள்கிறேன்” என்றார்.
மேலும், “ஆண்டுதோறும் மா சாகுபடிக்காக செலவிடும் தொகையில் ஒரு பகுதி கூட வருமானமாக கிடைப்பதில்லை. உற்பத்திச் செலவுகளை கூட ஈடுகட்ட முடியாத நிலை உள்ளது” என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத்தில் சுமார் 43 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தொடர் விலை சரிவு காரணமாக தற்போது அது 33 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மாங்காய் சாகுபடி தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால், பல விவசாயிகள் மாமரங்களை அகற்றி மாற்று பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் “மாங்கனி நகரம்” என்ற அடையாளத்தை கிருஷ்ணகிரி இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு, மா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்க வேண்டும். மேலும், மாமரங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

