சிறுவர்களின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டமூலத்தை கனடாவின் லிபரல் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. எனினும், போதிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு, இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் சமூக ஊடகங்களை மட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்களை (Chatbots) உருவாக்கும் நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்த முற்படுகிறது. சாட்பாட்கள் சிறுவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை வழங்குவதைக் குறைக்க வேண்டும் என்றும், தற்கொலை, சுயக்காயம் அல்லது வன்முறை தொடர்பான உரையாடல்களின் போது தகுந்த உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் நெறிமுறைகளை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை மற்றும் நாட்டின் AI உத்திகளுக்குச் சாட்பாட்கள் முக்கியம் என்பதால், அவற்றுக்கு முழுமையான தடை விதிக்கப்படாது என கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். அதேநேரம், சிறுவர்களின் வயதை எவ்வாறு சரிபார்ப்பது என்பது குறித்து இந்தச் சட்டமூலத்தில் குறிப்பிட்ட வழிமுறைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், இதற்கான தகுந்த வழிமுறைகளைக் கண்டறிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும் என அமைச்சர் மில்லர் கூறியுள்ளார். மேலும், வயது வந்தோருக்கான தளங்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து எந்தவித விதிவிலக்கும் அளிக்கப்படாது என்றும், அவை கடுமையான வயதுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய மருத்துவ சங்கம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தச் சட்டமூலத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இது குறித்துக் கருத்து தெரிவித்த கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் போலு ஒகுன்யெமி, “அந்நிய நாட்டு நிறுவனங்கள் நம் குழந்தைகளின் மனநலம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பலியிட்டுப் பணக்காரர்களாவதை அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கூகுள் மற்றும் மெட்டா (Meta) ஆகிய நிறுவனங்கள் இந்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளன. மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “முழுமையான தடை என்பது எதிர்பார்த்த பலனைத் தராது என்றாலும், பதின்ம வயதினருக்கான பாதுகாப்பு கணக்குகள் போன்ற தங்களின் தற்போதைய முயற்சிகளை அரசாங்கம் அங்கீகரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ‘டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம்’ (Digital Safety Commission) என்ற புதிய ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. எனினும், இந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்று ஒட்டாவா பல்கலைக்கழகச் சட்டப் பேராசிரியர் மைக்கேல் கெய்ஸ்ட் தெரிவித்துள்ளார்.


