Last Updated:
ஏஐ துறையில் மிகப் பெரிய உள்கட்டமைப்பை உருவாக்க ரிலையன்ஸ் உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பலமான கூட்டணிகளை அமைத்துள்ளது.
நுகர்வோராக மட்டுமின்றி ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குபவராக இந்தியா மாற வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸின் 49 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வீடியோ கான்பரன்சிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் 44 லட்சம் பங்குதாரர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி உரையாற்றினார். அப்போது இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) எதிர்காலம் குறித்த ரிலையன்ஸின் பிரம்மாண்டமான இலக்குகளைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் புதிய வளர்ச்சி இயந்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட “ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ்” (Reliance Intelligence), தற்போது திட்டமிடல் கட்டத்தில் இருந்து முழுமையான செயல்பாட்டுக் கட்டத்திற்கு (Execution Phase) நகர்ந்துள்ளதாக முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ரிலையன்ஸ் தனது லட்சிய ஏஐ பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. உலக நாடுகளால் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்தியா வெறும் நுகர்வோராக இருந்து பயன்படுத்தக் கூடாது; மாறாக, ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குபவராகவும், உலகளாவிய தலைவராகவும் இந்தியா உருவெடுக்க வேண்டும் என்றும் முகேஷ் அம்பானி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
ஏஐ துறையில் மிகப் பெரிய உள்கட்டமைப்பை உருவாக்க ரிலையன்ஸ் நிறுவனம் கூகுள் (Google), மெட்டா (Meta) மற்றும் என்விடியா (NVIDIA) போன்ற உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பலமான கூட்டணிகளை அமைத்துள்ளது.
இதன் மூலம் நுகர்வோர்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் ஆகிய அனைவருக்கும் தேவையான ஏஐ சேவைகளை மிக பிரம்மாண்டமான அளவில் வழங்குவதற்கான லாபகரமான உள்கட்டமைப்பு மற்றும் தளங்களை ரிலையன்ஸ் உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஐ குறித்து மேலும் பேசிய முகேஷ் அம்பானி 10 ஆண்டுகளுக்கு முன்பு, அனைவருக்கும் இணைய வசதியை ஜியோ உறுதியளித்தது. இன்று, ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் ‘அனைவருக்கும், எல்லா இடங்களிலும் ஏஐ’ என்பதை உறுதியளிக்கிறது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


