நியாமே:
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமேயில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐந்து மாதங்களுக்குள் இந்த விமான நிலையம் இலக்கு வைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
தலைநகரில் அமைந்துள்ள டிய்ரி ஹமானி (Diori Hamani) அனைத்துலக விமான நிலையத்தில், நேற்று (ஜூன் 18) காலை தொழுகை முடிந்த சில நிமிடங்களில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. திடீரென பயங்கர வெடிப்புச் சத்தமும், தொடர்ச்சியான துப்பாக்கிச்சூட்டுச் சத்தமும் கேட்டதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நைஜர் தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் துரதிர்ஷ்டவசமான மோதலில் 11 ராணுவ வீரர்களும், 2 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
அல்காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ‘ஜமாட் நுஸ்ராட் அல் இஸ்லாம் வால் முஸ்லிமின்’ (JNIM) என்ற இஸ்லாமியக் கிளர்ச்சிக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதே விமான நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் இக்குழுவே பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் உடனடியாக மூடப்பட்டு, பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அங்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக 20 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ள பாதுகாப்புப் படையினர், அவர்களிடமிருந்து RPG-7 ரக ஏவுகணைப் பாய்ச்சும் ஆயுதங்கள், AK-47 ரகத் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் மற்றும் அதிநவீன தகவல்தொடர்புச் சாதனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வெடிமருந்துகள் என்பன கைப்பற்றப்பட்டன.
தப்பியோடிய எஞ்சிய பயங்கரவாதிகள், பொதுமக்களோடு பொதுமக்களாகக் கலந்து தலைமறைவாகியுள்ளதால் அவர்களைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அதீத பயமும் பீதியும் அடைந்துள்ள உள்ளூர் மக்கள், தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் அடையாளம் தெரியாத நபர்களைத் தாக்க முற்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக ராணுவத்தினர் தற்போது அங்கு தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.



