
டி.கே.பி கபில
ரூபாய் ஏழு கோடியே ஐம்பது லட்சம் (75 மில்லியன்) பெறுமதியான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் தொகுதியைக் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்து வந்து, அங்குள்ள வருகை முனையத்தின் ‘பச்சை வழி’ (Green Channel) ஊடாகச் சுங்கப் பிரகடனம் ஏதுமின்றி வெளியேற முயன்ற இலங்கை விமான பயணி ஒருவர், இன்று (ஜூன் 19) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர், கொழும்பு – தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஆவார். இவர் இன்று (ஜூன் 19) முற்பகல் 09:35 மணிக்கு, தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘யு.எல்.-403’ (UL-403) எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பையைச் சோதனையிட்டதில், காற்று புகாதவாறு பொதியிடப்பட்டிருந்த 12 பக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 7 கிலோகிராம் 500 கிராம் நிறையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காகக் குறித்த பயணி மற்றும் அவர் கொண்டு வந்த போதைப்பொருள் தொகுதி ஆகியவை, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

