Gold price: 2 நாள் சரிவை மொத்தாக காலி செய்த தங்கம் விலை உயர்வு.. டாலர் கப்பல் கவிழ்ந்தது!
தங்கம் விலை ஆகஸ்ட் மாதம் முதல் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் வேளையில், செப்டம்பர் மாதம் கிணற்றில் போட்ட கல் போல தேக்கமடைந்துள்ளது. இந்த நிலையில் டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவின் காரணமாக 2 நாட்களாக பதிவான தங்கம் விலை சரிவுக்கு பின்பு, இன்று தடாலடியாக உயர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் இம்மாதம் 5ஆம் தேதி 186 ரூபாயும், 7ஆம் தேதி 65 ரூபாயும் குறைந்து தங்கம் விலை, இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 152 ரூபாய் உயர்ந்து 24 கேரட் ஒரு கிராம் 15,567 ரூபாயாக உள்ளது.

சென்னை ரீடைல் சந்தையில் தங்கத்தின் வரலாற்று உச்ச விலை என்பது 18,328 ரூபாயாக இருக்கும் நிலையில், உச்ச விலைக்கும், தற்போதை விலைக்கும் வெறும் 2761 ரூபாய் மட்டுமே வித்தியாசம். டாலர் மதிப்பு சரிய என்ன காரணம்?
ஜப்பான் மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு இருக்கும் காரணத்தால் யென் மதிப்பு உயர்ந்து டாலர் மதிப்பு சரிய துவங்கியுள்ளது. இதேவேளையில் அமெரிக்கா – கனடா மத்தியிலான 18 மாதங்கள் நடை பெறும் வர்த்தக பேச்சுவார்த்தை பெரும் தோல்வியில் முடிந்த நிலையில், இன்று முதல் 20 பில்லியன் டாலர் அமெரிக்க பொருட்களுக்கு 15-50 சதவீத வரி நடைமுறைக்கு வந்துள்ளது. இது அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் தங்கம் மீது தாவியுள்ளனர். இதேபோல் இந்த வாரம் இறுதியில் அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியாகும் காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை மிகவும் பாதுகாப்பான பிரிவில் போட முடிவு செய்துள்ளதாலும், தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 22 டாலர் அதிகரித்து 4,429.19 டாலராக உள்ளது, இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 4,443 டாலர் அளவீட்டை தொட்டு அசத்தியுள்ளது. தங்கம் விலையின் அதிரடியான உயர்வை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கட்டுப்படுத்தி வருகிறது.
இன்று பியூச்சர்ஸ் சந்தை வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.62 சதவீதம் உயர்ந்து 97.60 டாலராக உள்ளது, இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 1.65 சதவீதம் உயர்ந்து 92.99 டாலராக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வுடன் இருக்கும் பட்சத்தில் டாலர் மதிப்பு அதிகமாகவே இருக்கும், ஆனால் டிரம்ப் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது, இதேபோல் வளைகுடா நாடுகளும் ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுடைய எரிவாயு மற்றும் ஏரிபொருள் ஏற்றுமதியை துவங்குவதற்கான பணிகளை துவங்கியுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாலும் டாலர் மதிப்பு சரிவை ஏற்படலாம். டாலரின் வீழ்ச்சி தங்கம் விலை உயர்வுக்கு வழிவிடும் என்பது தான் சந்தையின் பார்மூலா.
