ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் விருப்ப வருங்கால வைப்பு நிதி (VPF) ஆகியவை சம்பளம் வாங்கும் தனிநபர்கள், வட்டியுடன் ஓய்வூதியத்தை உருவாக்க உதவும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இவை இரண்டுமே ஒரே நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், அதன் அம்சங்கள் தனித்துவமானவை. எனவே, EPF மற்றும் VPF ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை இனி தெளிவாக பார்ப்போம். மேலும், ரூ.25,000 அடிப்படை சம்பளம் பெறும் ஒருவர், VPF திட்டத்தின் மூலம் எவ்வளவு கூடுதல் தொகையை உருவாக்க முடியும் என்பதையும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்றால் என்ன?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) நிர்வகிக்கும் ஒரு ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். ஊழியர்கள் மற்றும் நிறுவனம் என இருவரின் பங்களிப்பும் ஓய்வூதியத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது, ஊழியர் தனது அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவீதத்தை ஓய்வூதியத்திற்காக வழங்குகிறார். அதே நேரத்தில் நிறுவனமும், இந்தத் தொகைக்கு இணையான தொகையை வழங்குகிறது. ஆனால், நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கும், மீதமுள்ள தொகை வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கும் செல்கிறது.
விருப்ப வருங்கால வைப்பு நிதி (VPF) என்றால் என்ன?
விருப்ப வருங்கால வைப்பு நிதி அல்லது தன்னார்வ வைப்பு நிதி (VPF) என்பது வருங்கால வைப்புநிதியின் நீட்டிப்பாகும். இது ஊழியர்களை அவர்களது ஓய்வூதியத்திற்காக அதிகமாக சேமிக்க அனுமதிக்கிறது. வருங்கால வைப்புநிதிக்கு மாறாக, ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 100 சதவீதம் வரை இந்த வைப்புநிதிக்கு பங்களிக்கலாம். ஆனால், நிறுவனமோ அல்லது முதலாளியோ இந்தத் திட்டத்திற்கு பங்களிப்பதில்லை. இது ஊழியர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக தானாக முன்வந்து ஓய்வூதியத்தை அதிகமாகச் சேமிக்க உதவும் ஒரு வழியாகும்.
VPF vs EPF: என்ன வித்தியாசம்?
VPF மற்றும் EPF இடையேயான முக்கிய வேறுபாடுகள் அவற்றின் வரி தாக்கங்கள், பங்கேற்புத் தேவைகள், பங்களிப்பாளர்கள் மற்றும் பங்களிப்பு வரம்புகளால் வேறுபடுகிறது. வரி நோக்கங்களுக்காக, EPF அல்லது VPFஇல் ரூ.2.5 லட்சத்திற்கு மேலான பங்களிப்புகள் மூலம் பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
ஊழியர்கள் வருங்கால வைப்புநிதி என்பது கட்டாயமாக இருந்தாலும், விருப்ப ஓய்வூதிய வைப்பு நிதியானது சுய விருப்பத்தைப் பொறுத்தது. இது ஊழியர்களை தங்களது ஓய்வூதியத்திற்காக அதிகமாக சேமிக்க உதவுகிறது. மாறாக, வருங்கால வைப்புநிதி என்பது ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் முதலாளிகள் என இருவரின் பங்களிப்புகளையும் உள்ளடக்கியது.
அதே நேரத்தில், விருப்ப ஓய்வூதிய வைப்புநிதி, ஊழியர்களால் மட்டுமே பங்களிக்கப்படுகிறது. இதில் கூடுதலாக, வருங்கால வைப்புநிதியானது 12 சதவீத பங்களிப்பு வரம்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் விருப்ப வைப்பு நிதியானது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 100 சதவீதம் வரை பங்களிப்புகளை அனுமதிக்கிறது.
வருங்கால வைப்புநிதி கணக்கீடு:
மாதாந்திர சம்பளம் (அடிப்படை + DA): ரூ.25,000 ஊழியரின் வருங்கால வைப்புநிதி பங்களிப்பு: 12 சதவீதம் தற்போதைய வயது: 25 ஆண்டுகள் எதிர்பார்க்கப்படும் வருடாந்திர சம்பள உயர்வு: 5 சதவீதம்
வருங்கால வைப்புநிதி: ரூ.25,000 அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
மொத்த முதலீடு: ரூ.45,05,360 மொத்த வட்டி: ரூ.1,35,99,128 திரட்டப்பட்ட முதிர்வு கால மொத்தத்தொகை: ஓய்வு பெறும்போது, ரூ.1,81,04,488
விருப்ப வைப்புநிதி பங்களிப்பு
மாதாந்திர சம்பளம் (அடிப்படை + DA): ரூ.25,000 ஊழியர் வருங்கால வைப்புநிதி பங்களிப்பு: 20 சதவீதம் தற்போதைய வயது: 25 ஆண்டுகள் எதிர்பார்க்கப்படும் வருடாந்திர சம்பள உயர்வு: 5 சதவீதம்
விருப்ப வைப்புநிதி: ரூ.25,000 அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? மொத்த முதலீடு: ரூ.68,05,474 மொத்த வட்டி: ரூ.2,05,41,873 திரட்டப்பட்ட முதிர்வுத் தொகை: ஓய்வு பெறும்போது ரூ.2,73,47,347

