கொழும்பு:
இலங்கையில் சுற்றுலா விசா மூலம் தங்கியிருந்து பாரிய அளவிலான இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக, 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாளிகள் என மொத்தம் 198 வெளிநாட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காலி, இக்கடுவை மற்றும் மிதிகம ஆகிய சுற்றுலாப் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை (மே 11) மாலை காவல்துறையினர் முன்னெடுத்த விசேட அதிரடிச் சோதனைகளின் போது இவர்கள் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் 25 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமான முறையில் இணையம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டது இவர்களின் மீதான முக்கிய குற்றச்சாட்டாகும்.
மேலும் விசா விதிமுறைகளை மீறியது, அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது மற்றும் சட்டவிரோத வேலைவாய்ப்பு மற்றும் கள்ளச் சிகரெட்டுகளை உடமையில் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு அனைத்துலக அளவிலான இணையக் குற்றக் கும்பல்களுடன் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் இலங்கையைத் தளமாகக் கொண்டு, வெளிநாடுகளில் வசிப்பவர்களைக் குறிவைத்து மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகப் புலனாய்வுத் துறையினர் கருதுகின்றனர்.
இலங்கையின் சிறந்த இணைய இணைப்பு வசதி மற்றும் இலகுவான விசா நடைமுறைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி, இத்தகைய கும்பல்கள் நாட்டைத் தளமாக மாற்ற முயல்வதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மட்டும் இணையக் குற்றங்கள் தொடர்பாக சீனா, வியட்நாம், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 626 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னர் 250 சீன நாட்டவர்கள் இதே போன்ற குற்றச்சாட்டில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.




