ஜோகூர்
ஜோகூர் மாநிலத்தில் கடந்த 53 நாட்களாக நீடித்து வரும் புகைமூட்டப் பிரச்சினை பொதுமக்களின் உடல்நலத்திற்கும் அன்றாட வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆசியான் நாடுகள் உடனடியாக அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டும் என ஜோகூர் மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் ஜோகூர் மாநிலம் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், பல பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற மற்றும் மிகவும் ஆரோக்கியமற்ற நிலைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான பேரிடர் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதாகவும், தீப்பரவலைக் கட்டுப்படுத்துதல், வெப்பப் புள்ளிகளைக் கண்காணித்தல் மற்றும் எதிர்காலத்தில் தீ விபத்துகளைத் தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளை ஆசியான் நாடுகள் வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள வெப்பம் காரணமாக எல்லை தாண்டிய புகைமூட்ட அபாயமும் அதிகரித்துள்ளது.
ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தின் (ASMC) தகவல்களின்படி, இந்தோனேசியாவின் கலிமந்தான் பகுதியில் 453 இடங்களிலும், சுமத்ராவில் 153 இடங்களிலும் தீப்பரவலுக்கான அறிகுறிகள் செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் தீப்பரவல் ஏற்பட்டு, புகை எல்லைகளைக் கடந்து பரவுமானால் ஜோகூர் உள்ளிட்ட பகுதிகளில் புகைமூட்டம் மேலும் மோசமடையக்கூடும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.
மேலும், ஜோகூர் மாநிலத்தையும் மலேசியாவையும் அனைத்து வகையான பேரிடர்களிலிருந்தும் பாதுகாக்க இறைவனிடம் பிரார்த்திக்குமாறு பொதுமக்களுக்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.



