12 ஆண்டுகள் நிறுவனத்திற்காக உழைத்தவர்.. ஒரே மெயிலில் தூக்கி எறியப்பட்ட பரிதாபம்..!! #Oraclelayoff
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆராக்கிள் (Oracle), நேற்று முன் தினம் திடீரென தனது ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்தது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்கள் இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென ஒரு ஈமெயில் அனுப்பி இன்று தான் உங்களுக்கு இந்த நிறுவனத்தில் கடைசி நாள் என தெரிவித்துள்ளனர்.
இந்த பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட சௌரப் சாஹு என்ற ஊழியரின் நிலைமை ஆன்லைனில் அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்துள்ளது. சௌரப் சாஹுவின் மனைவி பூஜா சாஹு தனது லிங்க்ட்இன் பக்கத்தில் தனது கணவருக்கு நேர்ந்த கதியை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.

டெக் உலகில் தன் குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்து தன் வேலையில் முழு அர்ப்பணிப்பை கொடுத்த அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம் என பூஜா சாஹு குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் ஆராக்கிள் நிறுவனத்தில் வேலை செய்த 12 ஆண்டுகளில், தனது நிறுவனத்திற்காக எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
விடுமுறை தினங்கள், பிறந்தநாள்கள், திருமண நாள்கள் மற்றும் ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகளின் போதும் கூட அவர் நிறுவனத்திற்காக தான் வேலை செய்தார் என கூறியுள்ளார்,. எனக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது மருத்துவமனையில் இருந்துகொண்டு கூட அவர் தனது அலுவலக கணினியில் லாகின் செய்து வேலை பார்த்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
என் கணவருக்கு எவ்வளவு வேலை பளு இருந்தாலும் குடும்பத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ அதை பற்றி ஒருபோதும் புகார் கூறியதே இல்லை. எப்போதும் முகத்தில் புன்னகையுடன், தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவி செய்வதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். எப்போதும் வேலை வேலை என 12 ஆண்டுகள் அர்ப்பணிப்போடு உழைத்த அவருக்கு கிடைத்த பரிசு பணிநீக்கம் என சோகத்துடன் கூறியுள்ளார். என் கணவர் 20 ஆண்டுகள் ஐடி துறையில் பணி அனுபவம் கொண்டவர் அவருக்கு ஏதேனும் வேலைவாய்ப்பு இருந்தால் தெரிவியுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சௌரப் சாஹுவின் இந்த நிலைமை, பல வருடங்களாக நிறுவனத்திற்காக தங்களை அர்ப்பணித்து உழைக்கும் ஊழியர்களுக்கு கிடைக்கும் முடிவு இதுதானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் ஒரு மின்னஞ்சல் வரும் வரை தான் நம் வேலைக்கு உத்தரவாதம் என்ற அச்சம் ஐடி ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆராக்கிள் நிறுவனம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு செவெரன்ஸ் பேக்கேஜ் எனப்படும் நிதி இழப்பீடுகளை அறிவித்துள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ஊழியர்கள் நிறுவனம் தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். திடீரென லாகினை முடக்கிவிட்டார்கள், அலுவலக மின்னஞ்சலை முடக்கிவிட்டார்லள் என சாடியுள்ளனர்.
ஆராக்கிள் நிறுவனம் இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஏஐ வருகை, ஆட்டோமேஷன், நிறுவன மறுசீரமைப்பு என பல காரணங்களை காட்டி ஆராக்கிள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது.

