Last Updated:
2023 முதல் 2025 வரை பனிப்பாறைகள் சுமார் 1,400 ஜிகாடன் நீரை இழந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஆண்டில் ஆறுகள் வறண்டுள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உலக நீரோட்டம் தொடர்ந்து நிலையற்றதாக மாறி வரும் நிலையில், நீண்டகால வறட்சி, கடுமையான வெள்ளம் ஏற்பட்டதுடன், இயற்கையான நன்னீர் வளங்கள் குறைந்து வருவது உலக நாடுகளின் நீர் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் உலகின் 36 சதவீத ஆற்றுப்படுகை பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவான நீர்வரத்து பதிவாகி இருக்கிறது.
மேலும், 2010ஆம் ஆண்டின் மத்திய காலக்கட்டம் முதல் ஏரிகள், ஆறுகள், மண்ணின் ஈரப்பதம், பனிப்பொழிவு உள்ளிட்ட நிலத்தடி நீர் சேமிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக அனைத்து முக்கிய பனிப்பாறை பகுதிகளிலும் பனிப்பாறைகளின் தடிமன் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அந்த ஆண்டு மட்டும் பனிப்பாறைகள் சுமார் 408 ஜிகாடன் பனியை இழந்துள்ளன. இதனால் உலக கடல் மட்டம் சுமார் 1.1 மில்லிமீட்டர் உயர்ந்துள்ளது. 2023 முதல் 2025 வரை பனிப்பாறைகள் சுமார் 1,400 ஜிகாடன் நீரை இழந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.


