100 கோடி பேரல் கச்சா எண்ணெய் காலி..!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை.. ஈரான் போரால் புது சிக்கல்..!!
ஈரான் போர் உலகளவில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டு இந்தியா உள்பட உலக நாடுகள் எங்கும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து கோடிக்கணக்கான மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஈரான் போர் காரணமாக ஈரான் மட்டுமல்ல வளைகுடா நாடுகளில் இருந்தே கச்சா சப்ளை நின்று போயுள்ளது. இதனால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய் தான் வெளியே எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான ADNOC-ன் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அல்-ஜாபர், அபுதாபியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டில் உலக நாடுகளுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது, எண்ணெய் கட்டமைப்புகள் தாக்கப்பட்டது ஆகிய காரணங்களால், உலக நாடுகள் அவசரகாலத்திற்காக சேமித்து வைத்திருந்த இருப்பிலிருந்து சுமார் 1 பில்லியன் (100 கோடி) பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை வெளியே எடுத்து பயன்படுத்திவிட்டன. இதனால் உலகின் எரிசக்தி பாதுகாப்பிற்கான Supply Buffers கடுமையாக குறைந்து வருகிறது என எச்சரித்துள்ளார்.
போர் சூழல் காரணமாக சில சந்தைகளில் டீசல் இருப்பு கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவை எட்டியுள்ளது என்றும், சில சந்தைகள் சுமார் 600 பில்லியன் கன அடி அளவிலான திரவ இயற்கை எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் சப்ளை தடையின் காரணமாக உலகின் பல பகுதிகளில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளதுடன், சாதாரண மக்களின் குடும்ப செலவுகளையும், தேசிய பணவீக்கத்தையும் பெரிதும் அதிகரித்துள்ளது என கவலை தெரிவித்துள்ளார். ஈரான் போருக்கு முன்பு, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையில் ஷிப்பிங் மற்றும் தளவாடச் செலவுகள் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தன. ஆனால், இந்த செலவு கிடுகிடுவென உயர்ந்து ஒரு பீப்பாய் விலையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக மாறியுள்ளது என கூறியுள்ளார்.
எரிசக்தி பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தியை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், அவசரகால நேரங்களில் நுகர்வோர் சந்தைகளுக்கு உரிய நேரத்தில் தடையின்றி விநியோகம் செய்யும் திறனையும் பொறுத்தது என கூறும் அவர் கையிருப்பை குறைவதை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்கிறார்.
கச்சா எண்ணெய் சப்ளை தடை, உற்பத்தி பாதிப்பு என அடுத்தடுத்த கெட்ட செய்திகளுக்கு மத்தியில் அவசரகால கையிருப்பும் காலியாகி வருவது எதிர்காலத்தில் பெரிய எரிபொருள் சிக்கலை உருவாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா தனது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய்க்கு வெளிநாடுகளை தான் சார்ந்திருக்கிறது. இந்த சூழலில் கச்சா எண்ணெய் இருப்பு குறைந்து வருவது இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.

