Last Updated:
மழை காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணியின் வெற்றிக்கு 143 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆக்லாந்து நகரில் தொடங்கியுள்ள நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டி20 தொடர்களில் இந்திய அணியின் பவுலிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை 185 ரன்களில் ஆல் அவுட் செய்து இந்திய பவுலர்கள் தங்களது திறமையை நிரூபித்தனர்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் வில் யங் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். பின்னர் இணைந்த டிம் சைபர்ட் டேரில் மிட்செல் இணை அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.
சைபர்ட் 38 ரன்களும், மிட்செல் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த கிளென் பிலிப்ஸ் 30 ரன்களும், பவுலர் ப்ளேர் டிக்னர் 34 ரன்களும் எடுத்தனர்.
40.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 185 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், குர்னூர் ப்ரார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மழை காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணியின் வெற்றிக்கு 143 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் இணைந்த கில் – கோலி இணை நியூசிலாந்து பவுலிங்கை வெளுத்து வாங்கியது. 56 பந்துகளில் கில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க விராட் கோலி 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
22.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


