Last Updated:
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், விவசாயிகள் பாரம்பரிய நாற்றாங்கால் முறையிலிருந்து டிரே நாற்று எனப்படும் இயந்திர நடவு முறைக்கு மாறி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், விவசாயிகள் பாரம்பரிய நாற்றாங்கால் முறையிலிருந்து டிரே நாற்று எனப்படும் இயந்திர நடவு முறைக்கு மாறி வருகின்றனர். இந்த மாற்றம் அதிக மகசூல் மற்றும் அரசு மானியம் போன்ற காரணங்களால் விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நெல் சாகுபடியில், முன்பு நாற்றாங்கால் அமைத்து, விதை நெல்லை விதைத்து, 25 நாட்களுக்குப் பிறகு நாற்றுகளை வயலில் நடவு செய்வது வழக்கமாக இருந்தது. தற்போது விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், இயந்திரம் மூலம் நடவு செய்யப்படும் டிரே நாற்று முறையில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
டிரே நாற்று தயாரிப்பதற்காக வயல்வெளியில் மேடை அமைக்கப்பட்டு, அதன் மீது பிளாஸ்டிக் கவர் விரிக்கப்படுகிறது. பின்னர் டிரேக்கள் அடுக்கப்பட்டு, அவற்றில் தேங்காய் நார் கலந்த உரம் இடப்படுகிறது. அதன் மீது நெல் விதைகள் ரோலர் மூலம் விதைக்கப்பட்டு, டிரேக்கள் வைக்கப்பட்டுள்ள மேடான பகுதிக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. நாற்றுகள் அதிக வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க, காற்றோட்டம் உள்ள பச்சை நிற துணியால் மூடப்படுகின்றன.
இவ்வாறு தயாரிக்கப்படும் நெல் நாற்றுகள் 17 முதல் 22 நாட்களுக்குள் வயலில் இயந்திரம் மூலம் நடவு செய்யப்படுகின்றன. இந்த முறையில் நடவு செய்யப்படும் நாற்றுகள் அழுகல் இல்லாமல் நன்கு வளர்வதாகவும், அதிக கிளைப்புகள் உருவாவதால் மகசூல் அதிகரிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், நெல் வயலில் களைகளை அகற்றும் தேவையும் குறைவதாகக் கூறப்படுகிறது.
டிரே நாற்று மூலம் இயந்திர நடவு செய்வதற்கு குறைந்த நேரமே தேவைப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு நாற்று மற்றும் நடவு பணிகளுக்காக சுமார் ரூ.7,500 மட்டுமே செலவாகிறது. இது அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இந்த முறைக்கு மாறுவதற்கு ஒரு காரணமாகும். மேலும், இயந்திரம் மூலம் நாற்று நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம் வழங்கப்படுவதும், இந்த முறையை விவசாயிகள் தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

