ரூ.40,000 சம்பளம் தரும் வேலையை விட்டு விட்டு.. ராபிடோ ஓட்டி ரூ.1.2 லட்சம் சம்பாதிக்கும் இன்ஜினியர்!
ஒரு காலத்தில் நல்ல கல்லூரியில் படித்துவிட்டு.. பட்டம் பெற்று.. பின்னர் ஒரு கார்ப்பரேட் வேலையில் சேர்ந்து விட்டால் போதும் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால் இன்றைய விலைவாசி உயர்வு அதற்கு ஏற்றவாறு இல்லை. கார்ப்பரேட் வேலையில் இருப்பவர்களும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். நாளுக்கு நாள் விலைவாசி உயர்கிறதே தவிர.. சிலருக்கு சம்பளம் அதிகரிக்கவில்லை.
அப்படித்தான் ரூ.40,000 சம்பளம் பெற்று கார்ப்பரேட் வேலையில் இருந்த ஒரு இன்ஜினியர்.. குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் ராபிடோ ஓட்டத் தொடங்கியுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால்.. இதன் மூலம் மாதா மாதம் ரூ.1.2 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் தற்செயலாக ராபிடோவில் பயணித்துள்ளார். ராபிடோ ஓட்டுநரிடம் அந்தப் பெண் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது தான் அவர் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு ராபிடோ ஓட்டுவது தெரியவந்தது. அவருடன் பேசிய அனுபவத்தை அந்தப் பெண் X தளத்திலும் பகிர்ந்துள்ளார்.
பிரதர் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறீங்க? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநர் ஒரு நாளைக்கு ரூ.4000 வரை சம்பாதிக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார். அவருடைய பதிலை கேட்ட அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி தாளவில்லை.
முதலில் மாத வருமானத்தை தான் அவர் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டார். அது அவருடைய ஒருநாள் வருமானம் என்பதை தெரிந்து கொண்டு.. அப்போ மாதத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல சம்பாதிக்கிறீர்களா? என்று அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு அந்த ஓட்டுனர்.. ஆம்! ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.2 லட்சம் வரை கிடைக்கும் என்று பதில் அளித்துள்ளார்.
ஓட்டுனரின் பதிலைக் கேட்டதும் அந்த பெண்ணுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதற்கு முன்னர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து மாதம் ரூ.40,000 சம்பாதித்ததாகவும்.. அந்த சம்பளம் செலவுக்கு போதவில்லை என்றும் கூறியுள்ளார். அதோடு பட்டப்படிப்பும் நல்ல வேலையும் இருந்தாலும் குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத சூழலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்ஜினியர் ராபிடோ ஓட்டுனராக மாறியதற்கு காரணம் என்ன?: ராபிடோ ஓட்டுனராக மாறியதற்கு காரணம் என்ன என்பதையும் அவரே பகிர்ந்துள்ளார். முதலாவதாக அதில் அதிக வருமானம் கிடைக்கிறது. மற்றொன்று சொந்த ஊரிலேயே வேலை செய்ய முடிகிறது.”இப்போது நான் என் சொந்த ஊரிலேயே மகிழ்ச்சியாக வேலை செய்கிறேன். எனக்கு கிடைக்கும் வருமானத்தில் சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் ராபிடோ ஓட்டுநர் கூறியுள்ளார்.
பெரும்பாலானோருக்கு வெளியில் தங்கி வேலை செய்தாலும் குடும்பத்துடன் இருந்து கொண்டே நல்ல வருமானம் ஈட்ட வேண்டும் என்று ஆசை. கார்ப்பரேட் வேலை என்னவோ கவுரவமானதாக இருக்கலாம். ஆனால் குடும்பச் செலவுகளை கூட அதை வைத்து பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால்.. கண்டிப்பாக பிற வேலையை தேட வேண்டும் தானே என்று பதில் அளித்துள்ளார். இதை கேட்ட அந்தப் பெண் தனது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
நல்ல டிகிரி, பெரு நிறுவனத்தில் வேலை போன்றவை தான் நிம்மதி என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் சமூக ரீதியாக ஒரு வேலை கௌரவமானதாக தோன்றினாலும் அதன் மூலம் அன்றாடச் செலவுகளை கூட கையாள முடியவில்லை என்றால் அந்த வேலை இருந்தும் பிரயோஜனம் இல்லாததுதான்.
இதிலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் மாறுபட்ட ஒன்று. ஒருவருக்கு சரியாக இருக்கும் வேலை மற்றவருக்கு சரியாக இல்லாமல் இருக்கலாம். எனவே தங்கள் வசதிக்காக நல்ல வேலையை விட்டு வெளியேறுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

