யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை மாணவர்களின் ஏற்பாட்டில், சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு ‘Lucentia 2026’ மனநலக் கண்காட்சி புதன்கிழமை (21) சிறப்பாக நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் ‘அகம்’ உளவியல் ஆய்வுக்கூட வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வு, “ஆரோக்கியமான மனமும், கனிவான சமூகமும் ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளிலும், “சிறந்த மனநலம், பிரகாசமான எதிர்காலம்” என்ற நோக்கத்துடனும் முன்னெடுக்கப்பட்டது.
மெய்யியல் துறைத் தலைவர் திருமதி தர்ஷிகா கோர்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி பிரதம விருந்தினராகவும், கலைப்பீடாதிபதி பேராசிரியர் ந. பிரதீபராஜா சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
கண்காட்சியில் மனநல விழிப்புணர்வு, உளவளத்துணை மற்றும் ஆதரவு சேவைகள், நலன்புரிச் செயற்பாடுகள், ஊடாடும் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. அத்துடன், மனநலம் தொடர்பான உள்ளூர் மற்றும் சர்வதேச வளங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மனநலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இக்கண்காட்சி, மாணவர்கள் மற்றும் சமூகத்தினர் மத்தியில் மனநலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.
தீரன் ககோபிநாத்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.







