Last Updated:
மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை, கர்நாடகா நிச்சயம் செயல்படுத்தும் என அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வரும் நிலையில், தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு நிச்சயம் செயல்படுத்தும் எனவும், அணை கட்டுவதற்கு எதிராக அண்டை மாநிலங்கள் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், குறைகளை சரிசெய்து வரும் 15-ஆம் தேதிக்குள் மீண்டும் சமர்ப்பிப்போம் என கூறினார். மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எந்த மதிப்பும் இல்லை எனவும், மேகதாது அணைக்கு எதிராக 2 முறை தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் எனவும், அது குறித்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விரிவாக விவாதிப்போம் என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறினார்.
Aug 06, 2026 11:10 AM IST
மேகதாது அணை: “தமிழக அரசுக்கு அதிகாரமில்லை” – கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி!


