கோலாலம்பூர்:
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன மலேசியத் தீயணைப்பு மீட்புத் துறையின் (BOMBA) சிறப்பு வான்படை அதிகாரி முகமட் ஃபக்ருல் முனீர் என்பவரைத் தேடும் பணிகளை நேரில் அறிந்து கொள்ள அவரது மனைவி ஹானி ஒத்மான் இன்று காத்மண்டுவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
வீட்டில் அமர்ந்து அழுவதை விட, களத்தில் இறங்கி முயற்சி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனியாகப் பயணம் மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். காத்மண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்திற்கும் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியத் தீயணைப்புத் துறையின் மூத்த அதிகாரியான முகமட் ஃபக்ருல் முனீர் (40-களில் உள்ளவர் – ‘Loe’ என அழைக்கப்படுபவர்) மற்றும் அவரது சக அதிகாரி முகமட் சாணி ஹாருல் ஆகிய இருவர் உட்பட மலேசியர்கள் பலர் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ளனர்.
இதே வெள்ளப்பெருக்கில், திபெத் கயிலாய மலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட மலேசியப் பெண் எம். வெண்ணிலா (52) என்பவரும் தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளார். அவரது சகோதரி எம். வசந்தி (51) கூறுகையில், வெண்ணிலா தனது 35 நண்பர்களுடன் நேபாளம் வழியே பயணத்தைத் தொடர்ந்த நிலையில் கடந்த புதன்கிழமைக்குப் பிறகு தொடர்பு கிடைக்கவில்லை என்றும், அவரது 3 பிள்ளைகளும் தாயின் வருகைக்காகக் கண்ணீருடன் காத்திருப்பதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.
மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி, ஆகஸ்ட் 27 நிலவரப்படி நேபாள வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு மொத்தம் 57 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் தவித்து வருகின்றனர்.



