Last Updated:
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக எழுந்த புகார் அடிப்படையில், அவர் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
2019 மக்களவைத் தேர்தலில் தன்னை பாஜக சார்பில் போட்டியிடுமாறு ஞானேஷ்குமார் அறிவுறுத்தியதாக, கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி.ஜி.தாம்சன் புதிய புயலைக் கிளப்பியுள்ளார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக எழுந்த புகார் அடிப்படையில், அவர் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்தச் சூழலில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி.ஜி.தாம்சன், ஞானேஷ்குமார் குறித்து புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதாவது, 2016ஆம் ஆண்டு தாம்சன் தலைமைச் செயலாளராக இருந்தபோது, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடுமாறும், வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாகவும் ஞானேஷ்குமார் முன்மொழிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பாஜகவிடம் இருந்து அல்லாமல், ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்து வந்த இந்த ஆஃபர் தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகக் கூறியுள்ள தாம்சன், தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லாததால் வேண்டாம் என மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளின் போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்ததாகவும், இதற்கு எதிராக, மற்ற தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், 14 முறை எழுத்துப்பூர்வமான ஆட்சேபனைகளை பதிவு செய்தாக தகவல் வெளியானது.
இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


