Last Updated:
திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்தாண்டு டிச.3-ம் தேதி தீபம் ஏற்றக்கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவிகுமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்ற வேண்டுமென கடந்த 2025 டிச.1-ல் உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஆட்சியர், காவல் ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததற்காக வருத்தம் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும், அவமதிப்பு நடவடிக்கையை எதிர்த்து அதிகாரிகளும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த மதுரை அமர்வு, அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அதே வேளையில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தற்போதைய சூழலில் எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் வழக்கை முழுமையாக விசாரித்து அதன் பின்பே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தனி நீதிபதி ஜனவரி மாதமே உத்தரவிட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய இத்தனை நாட்கள் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது என நீதிபதிகள் அரவிந்த் குமார் அமர்வு கேள்வி எழுப்பினர்.
Aug 03, 2026 12:00 PM IST


