கோலாலம்பூர் :
கடந்த மாதம் தாமான் ஆலாம் மேகா பகுதியில் நடந்த குழு மோதலில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட 8 நபர்கள் மீது இன்று ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுலாமி அகிம்ஷா (46), எஸ்.ஆர். ஹரிகிருஷ்ணன் (42), எம்.கே. புவனேஸ்வரன் (39), ஏ. ரூபன் (37), கே. திவாகர் (29), ஷேக் ஹசானுதீன் அஹ்லாவுதீன் (26), ஷேக் மெஉளலுதீன் அஹ்லாவுதீன் (24) மற்றும் ஆர். தார்வின் ராஜ் (23) ஆகிய 8 பேர் மீது மாஜிஸ்திரேட் சிந்தியா நூர் ஹைசியான் சுலைமான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிற்பகல் 1:59 மணியளவில், தாமான் ஆலாம் மேகா, ஜாலான் மாண்டலின் பகுதியில் சட்டவிரோதமாகக் கூடிய கும்பல், கணேசன் (23) என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 149-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, பிரிவு 302-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இக்கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
மேலும், நீதிமன்றம் இவர்களுக்குப் பிணை வழங்க மறுத்து, வழக்கை மீண்டும் அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இவ்வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ள 8 நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



