முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொல்கொல்ல திரையரங்கு கொள்வனவு மோசடி விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கிற்கு 74 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளை கொள்வனவு செய்ததில் உரிய கேள்விப்பத்திர நடைமுறைகளை பின்பற்றாது அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தி ஊழல் புரிந்த குற்றச்சாட்டின் பேரில், வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம் இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணைக்கு அமைய, முன்னதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் வேறு தினமொன்றை கோரியிருந்த நிலையில், இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் அப்போதைய அமைச்சின் செயலாளருக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சுகவீனமுற்றிருப்பதன் காரணமாக முன்னிலையாக முடியாது என ஆணைக்குழுவிற்கு அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

