Last Updated:
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று (6ஆம் தேதி) எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி மேற்கொண்டனர். காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் பேரணியை தொடங்கி, தேர்தல் ஆணையம் நோக்கி சென்றனர்.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் திருமாவளவன், சு. வெங்கடேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் அருகேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சென்ற போது காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சுமார் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களைச் சந்திக்க விரும்பினோம். ஆனால், காவல்துறையினர் எங்களை இங்கே தடுத்து நிறுத்திவிட்டனர். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஏன் இங்கே தடுத்து நிறுத்தப்பட்டோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மோகன் பகவத் ஆகியோர் ‘வாக்குத் திருட்டு’ மூலம் நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். ஞானேஷ் குமார் அவர்களுக்குத் துணை நின்றார். அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நம் நாட்டிற்கு இழைக்கப்பட்ட இந்தச் செயல் தேசத்துரோகம் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியினர், குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் அவரது சகாக்கள் நடத்தி வரும் அன்றாட நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
#WATCH | Delhi: Lok Sabha LoP Rahul Gandhi detained by Delhi Police.
INDIA bloc MPs were staging a protest at Akashvani Bhavan against Chief Election Commissioner Gyanesh Kumar.(Source: AICC) https://t.co/H70GDRtUnU
— ANI (@ANI) October 6, 2026
அதேசமயம் தொடர்ந்து ராகுல் காந்தி உட்பட எம்.பி.க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், காவல்துறையினர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா காந்தி உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.


