ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத் தலைநகரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையைத் தொடர்ந்து பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்ட காட்சிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இஸ்தானா புக்கிட் செரீன் வெளிப்பகுதி, தாமான் பெர்லிங், நகர் மையத்தை நோக்கிய ஸ்கூடாய் நெடுஞ்சாலை, தாமான் கொலாம் ஆய்ரில் உள்ள ஜாலான் கொலாம் ஆய்ர் மற்றும் காம்பாங் செரி ஜெயாவில் உள்ள ஜாலான் செமாங்கா ஆகிய பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
“கம்போங் ஸ்ரீ ஜெயாவில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதுவரை தற்காலிக நிவாரண மையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. ஸ்கூடாய் நெடுஞ்சாலை மற்றும் ஜாலான் கொலாம் ஆயிர் ஆகிய பகுதிகளுக்குத் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு நிலைமை மாலை 3.50 மணிக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது” என்று, ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையின்படி, குறுகிய காலத்தில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவால் வடிகால் அமைப்புகள் நிரம்பி வழிந்ததே இதற்குக் காரணமாகும்.
கடந்த 2023 முதல் ஜோகூர் மாநில அரசு 16 உள்ளூர் அதிகார அமைப்புகளின் கீழ் 353 வெள்ள மேலாண்மைத் திட்டங்களுக்காக RM213 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இதில் ஜோகூர் பாருவுக்கு மட்டும் 16 திட்டங்களுக்காக RM42.4 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டரசு அளவில் RM99.8 மில்லியன் செலவில் ‘சுங்கை சுகூடாய்’ ஒருங்கிணைந்த ஆற்றுப் படுகை மேம்பாட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய திடீர் வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆராயவும், உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவும் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான முக்கியக் கூட்டம் நாளை நடைபெறும் என மாநில வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி மன்றக் குழுத் தலைவர் டத்தோ முகமட் ஜாஃப்னி முகமட் ஷுகோர் தெரிவித்துள்ளார்.



