
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட பிளைடுபாய் விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகக் கூறப்படும் துணை விமானியை, பயணிகள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட FZ1073 விமானத்தில் 170-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சில நேரத்தில், துணை விமானி, விமானத்தின் பிரதான விமானியை கத்தியால் குத்தியதாகவும், பின்னர் விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக கீழ்நோக்கிச் செல்லத் தொடங்கியபோது, பயணிகள் மற்றும் விமானப் பணியாளர் ஒருவர் இணைந்து விமானியின் அறைக்குள் நுழைந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். அப்போது துணை விமானி விமானத்தின் அமைப்புகளை சேதப்படுத்த முயன்றதாக அவர் கூறினார்.
காயமடைந்த பிரதான விமானி ரத்த வெள்ளத்தில் விமானியின் அறையின் தரையில் கிடந்ததாகவும், அவரே விமானியின் அறைக் கதவைத் திறந்ததாகவும் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். விமானத்தில் இருந்த மாற்று விமானிகள் இருவர் பின்னர் விமானத்தை பாதுகாப்பாக சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறக்கினர்.
விமானப் போக்குவரத்தை கண்காணிக்கும் Flightradar24 இணையதளத் தரவின்படி, அவசர சமிக்ஞை அனுப்பப்படுவதற்கு முன்பாக, விமானம் 30 செக்கன்களுக்கும் குறைவான நேரத்தில் சுமார் 14,000 அடி உயரத்தை வேகமாக இழந்துள்ளது.
விமானம் தரையிறங்கியதும் துணை விமானி கைது செய்யப்பட்டதாக நெதன்யாகு தெரிவித்தார். இஸ்ரேலிய அதிகாரி ஒருவரின் தகவலின்படி, அவர் ஓமான் நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், காயமடைந்த இரு விமானிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தபூக் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் சுமார் 8 மணி நேரம் தரையில் நிறுத்தப்பட்டிருந்த பின்னர், பயணிகள் பிளைடுபாயின் மாற்று விமானம் மூலம் சவுதி அரேபியாவில் இருந்து இஸ்ரேலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

