அரண்மனைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஜோகூர் தேர்தலுக்கான தனது வேட்பாளராக பக்காத்தான் ஹரப்பான் எந்த வேட்பாளரையும் அறிவிக்கவில்லை என்று மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.மாநிலத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு மந்திரி பெசார் பதவிக்கு வேட்பாளரை அறிவிப்பது தேவையற்றது என கூட்டணி கருதுவதாகவும், ஏனெனில் அந்த நியமனம் இறுதியில் ஜோகூர் ஆட்சியாளரின் கையில்தான் உள்ளது என்றும் புத்தேரி வாங்சா தொகுதியின் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் கூறினார்.அரண்மனையின் பங்கை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதன் முடிவுகளை நாங்கள் மீற விரும்பவில்லை.
அதற்குப் பதிலாக, மாநிலத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்யத் தயாராக இருக்கும் திறமையான வேட்பாளர்களின் குழுவை நாங்கள் வழங்குகிறோம் என்று நேற்று இஸ்கண்டார் புத்ரியில் நடந்த இளைஞர் கலந்துரையாடல் அமர்வுக்குப் பிறகு அவர் கூறியதாக ‘தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.
மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பி.எச். கட்சிக்கு ஒரு முக்கிய வேட்பாளர் இல்லாதது குறித்து முன்னாள் கல்வி அமைச்சரிடம் வினவப்பட்டது. அந்தக் கலந்துரையாடல் அமர்வில், தேர்தலுக்கு முன்பு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிப்பது, இறுதியில் மாநிலத்தை யார் வழிநடத்துவார் என்பதைத் தீர்மானிக்காது என்பதை கடந்தகால அனுபவம் காட்டியுள்ளது என்று மஸ்லீ கூறினார். 2022இல் நடந்த முந்தைய ஜோகூர் மாநிலத் தேர்தலை அவர் சுட்டிக்காட்டினார். அப்போது பாரிசான் நேஷனல், ஹஸ்னி முகமதுவை தனது மந்திரி பெசார் வேட்பாளராக அறிவித்தது, ஆனால் இறுதியில் ஒன் ஹபீஸ் காசி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். மந்திரி பெசார் பதவிக்கு பி.எச். கட்சியின் தேர்வாக மஸ்லீ முன்னிறுத்தப்பட்டுள்ளதாக ஊகங்கள் பரவி வருகின்றன.



