ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே கடந்த காலத்தில் இருந்தது, தற்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாதுகாப்பில் உள்ள செயல்பாட்டு இடைவெளியைக் குறைத்தல், பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை பேணுதல் என்ற தலைப்பில் நடைபெற்ற பாதுகாப்பு சபையின் அர்ரியா – ஃபார்முலா கூட்டத்தில் பேசிய ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ்,
காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பிரதிநிதி வெளியிட்ட தேவையற்ற கருத்துக்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சமநிலையோடும், பாரபட்சமின்றியும் நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் ஒருவர் இந்தக் கூட்டத்தை அரசியல் மயமாக்க முயன்றது நம்ப முடியாததாக உள்ளது.
நேரமின்மை காரணமாக நான் ஒன்றை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவின் முற்றிலும் உள்நாட்டு விவகாரம். அது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது, இப்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும் எனத் தெரிவித்தார்.
ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக சீனா உள்ளது. 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அதன் நிரந்தரமற்ற உறுப்பினராக பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளின் நிரந்தர பிரதிநிதித்துவ அலுவலகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி ஆசிம் இஃப்திகார் அகமது, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். இதையடுத்து, அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதிநிதி பர்வதனேனி தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானது என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியை இந்தியா வசம் ஒப்படைப்பது தொடர்பானது எனவும் இந்தியா கூறி வருகிறது.
மேலும், இதில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா உறுதியாக நிராகரித்து வருகிறது. அந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் பிரதிநிதி பர்வதனேனியின் உரை அமைந்திருந்தது. (a)

