கோலாலம்பூர்:
தனது 17 வயது சொந்த மகளையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலியல் வன்புணர்வு செய்து, அச்சிறுமி கர்ப்பமடையக் காரணமாயிருந்த 46 வயது பெற்ற தந்தையைக் காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
இக்கொடூரச் சம்பவம் குறித்துக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாதில் மார்சூஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கடந்த ஜூன் 18-ஆம் தேதி இரவு 9.07 மணியளவில் அரசு மருத்துவ அதிகாரி ஒருவரிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி மருத்துவப் பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். சிறுமிக்கு 12 வயது இருக்கும் போதிலிருந்தே, அவரது தந்தை அவரைத் கட்டாயப்படுத்தித் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து டத்தோ ஃபாதில் மார்சூஸ் மேலும் கூறுகையில், “இந்தக் கொடூரச் சம்பவம் புத்ராஜெயாவில் உள்ள ஒரு குடியிருப்பில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 46 வயது சந்தேக நபர் வேலை இல்லாதவர் (penganggur) ஆவார். இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நபரைக் காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது.”
இந்த விவகாரத்தில் விசாரணைப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சந்தேக நபர் நாளை (ஜூன் 25) புத்ராஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்படவுள்ளார்.
தற்போது இக்கொடூரச் சம்பவம் குறித்து, நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் நிகழும் பாலியல் வன்புணர்வைக் கையாளும் குற்றவியல் சட்டப் பிரிவு 376(3)-இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்குக் கடுமையான சிறைத்தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



