Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இங்கிலாந்து டி20 தொடரின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்கியது தான் ஒரு பயிற்சியாளராக நான் எடுத்த கடினமான முடிவு என்று கம்பீர் கூறியுள்ளார். அதேபோல் 4 போட்டிகளில் மோசமாக ஆடியதால் ஒரு வீரர் மோசமான வீரராக மாறிவிட மாட்டார் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த தொடர் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சனுக்கு மிக முக்கிய ஒன்றாக மாறியது. ஏனென்றால் 3 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் 2 அரைசதங்கள் உட்பட 117 ரன்களை விளாசி தள்ளினார்.

இதன் மூலமாக மீண்டும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் தவிர்க்க முடியாத வீரராக மாறி இருக்கிறார். இங்கிலாந்து தொடரின் போது வைபவ் சூர்யவன்ஷிக்காக கம்பீர் 3 போட்டிகளில் சஞ்சு சாம்சனை பெஞ்சில் அமர வைத்தார். அது சஞ்சு சாம்சனை மனதளவில் புரட்டி போட்டது. அதேபோல் ஜிம்பாப்வே டி20 தொடரிலும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை.
இதனால் ஆஃப்கானிஸ்தான் தொடர் சஞ்சு சாம்சனுக்கு வாழ்வா சாவா தொடராக அமைந்தது. அதனை சிறப்பாக பயன்படுத்தி கொண்டு சம்பவம் செய்துள்ளார். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசுகையில், இங்கிலாந்து டி20 தொடரின் போது சஞ்சு சாம்சனை பெஞ்ச் செய்தேன். என்னுடைய பயிற்சியாளர் பயணத்தில் எடுக்கப்பட்ட கடினமான முடிவு என்று அதனை தான் சொல்லுவேன்.
டி20 உலகக்கோப்பையில் அற்புதமாக ஆடிய சஞ்சு சாம்சனை பெஞ்ச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் தொடரில் மீண்டும் டி20 உலகக்கோப்பை காம்பினேஷனில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் 3 அல்லது 4 போட்டிகளில் அடையும் தோல்வி ஒரு போதும் ஒருவரை மோசமான வீரராக மாற்றிவிடாது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்புக்கு வந்த பின்னரே சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தது. ஒருமுறை சஞ்சு சாம்சனை நேரில் அழைத்த கவுதம் கம்பீர், நீ தொடர்ச்சியாக 17 முறை டக் அவுட்டானாலும், உனக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கொடுப்பேன் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


