உலக அரசியல் மேடைகளிலும் தூதரக தகவல் தொடர்புகளிலும் பொதுவாகக் கடுமையான அறிக்கைகளும் மரபுசார்ந்த வார்த்தைகளுமே பயன்படுத்தப்படும். ஆனால், ஆந்திரா, தெலங்கானாவுக்குப் பொறுப்பான ஹைதராபாத் ஈரான் தூதரகம், சர்வதேச விவகாரங்களை இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க இந்தியத் திரையுலகின் மாஸ் காட்சிகளைப் பயன்படுத்தும் புதிய ராஜதந்திரப் போக்கைக் கையில் எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபர் பேசிய பேச்சை விளக்குவதற்காக அவர்கள் “பாகுபலி’ திரைப்படக் காட்சியைப் பயன்படுத்தியது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

என்ன நடந்தது?
செப்டம்பர் 23 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உரையாற்றினார். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான பதற்றம் நீடித்து வரும் சூழலில், “எங்கள் நாடு பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது; ஆனால் எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் தடைகளுக்கும் பணியாது. நாங்கள் யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” என்று பேசினார்.
இந்த உரையை மேற்கோள்காட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் தனது அதிகாரபூர்வ ‘X’ பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது: “Dr. Pezeshkian, President of I.R Iran at UNGA: ‘Will never bow our head or bend the knee’ — Like Baahubali standing against the Kalakeyas, we also shed our own blood in sacrifice for the homeland.”
(ஐ.நா பொதுச்சபையில் ஈரான் அதிபர் டாக்டர் பெசெஷ்கியன்: ‘நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்’. காலகேயர்களை எதிர்த்து நின்ற பாகுபலியைப் போல, தாயகத்திற்காக நாங்களும் எங்கள் ரத்தத்தைச் சிந்தித் தியாகம் செய்வோம்.)

