ஈப்போ: லெங்கோங்கில் உள்ள கம்போங் கெலோக் அருகே, ஜாலான் கெரிக்-கோல கங்சார் சாலையில் (KM49), மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 47 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், கோல கங்சார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாதிக்கப்பட்ட நபர் அங்கு உயிரிழந்ததாக கெரிக் மாவட்ட காவல் துறைத் தலைவர் அப்துல் சமத் ஒத்மான் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபரும், அவருடன் சென்ற 36 வயதுடைய மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டியும் கோல கங்சாரிலிருந்து கெரிக் நோக்கி ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் வந்த 36 வயது நபர், சரியான நேரத்தில் தனது வாகனத்தை நிறுத்த முடியாமல், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார்.
இருவரும் முதலில் லெங்கோங் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், உயிரிழந்த நபர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 36 வயதுடைய நபர் முகத்தில் காயமடைந்து, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று அப்துல் சமத் ஒத்மான் தெரிவித்தார்.



