Last Updated:
மெட்டா (Meta) மற்றும் கூகுள் (Google) போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முந்தைய முதலீடுகள் ஜியோவின் மீதான சர்வதேச நம்பிக்கையை அதிகரித்துள்ளன
இந்தியப் பங்குச் சந்தையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடக்கப் பொது வெளியீடாகக் கருதப்படும் ‘ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்’ (Jio Platforms) நிறுவனத்தின் ஐபிஓ-வின் ஆங்கர் முதலீட்டாளர் (Anchor Investor) பதிவு இன்று (அக்டோபர் 19) தொடங்குகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்குச் சொந்தமான இந்த டிஜிட்டல் மற்றும் டெலிகாம் ஜாம்பவானின் பொது வெளியீடு, சில்லறை மற்றும் இதர முதலீட்டாளர்களுக்கு அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரை சந்தாதாரர் விண்ணப்பத்திற்காகத் திறக்கப்படவுள்ளது.
இந்த ஐபிஓ மூலமாக ஜியோ நிறுவனம் சுமார் ரூ. 30,213 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. இதற்காகப் பங்கின் விலை வரம்பு ரூ. 1,065 முதல் ரூ. 1,119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் எல்லையின்படி (Upper end), இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ. 10.3 லட்சம் கோடி (தோராயமாக 108 பில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முழு வெளியீடும் புதிய பங்கு விற்பனையாகும் (Fresh issue of up to 27 crore equity shares) என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எந்தவிதமான ‘ஆஃபர் ஃபார் சேல்’ (OFS) பகுதியும் இடம்பெறவில்லை.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் 2016-ஆம் ஆண்டில் டெலிகாம் துறைக்குள் நுழைந்ததிலிருந்து இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. ஜூன் 30, 2026 நிலவரப்படி, இந்நிறுவனம் சுமார் 533.3 மில்லியன் (53.3 கோடி) சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
மொபைல் இணைப்பு மட்டுமின்றி, ஹோம் பிராட்பேண்ட், எண்டர்பிரைஸ் கனெக்டிவிட்டி, கிளவுட் சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளிலும் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளின்படி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ரூ. 39,713 கோடி வருவாயும், ரூ. 7,764 கோடி நிகர லாபமும் ஈட்டியுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் இந்த ரூ. 30,213 கோடி மதிப்பிலான ஐபிஓ, கடந்த 2024-ஆம் ஆண்டில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா திரட்டிய ரூ. 27,870 கோடி ஐபிஓ சாதனையை முறியடித்து, இந்தியாவின் ஆகப்பெரிய பொது வெளியீடாக சாதனை படைக்கவுள்ளது.
மெட்டா (Meta) மற்றும் கூகுள் (Google) போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முந்தைய முதலீடுகள் ஜியோவின் மீதான சர்வதேச நம்பிக்கையை அதிகரித்துள்ளன. இன்றைய ஆங்கர் முதலீட்டாளர்களின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, அக்டோபர் 21 முதல் தொடங்கும் பொதுப் பங்கு வெளியீட்டில் முதலீட்டாளர்களின் பார்வை தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


