Last Updated:
கர்நாடகா மாநிலம், குடகு மலைப் பகுதியில் யானைகளிடையே நடந்த சண்டையில், சென்னை பெண் பலியாகியுள்ளார்.
சுற்றுலா சென்ற இடத்தில் யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், சென்னையைச் சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த காட்சியே இது.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஜூனேஷ் என்ற பெண், தனது கணவர் மற்றும் 6 வயது மகளுடன் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றார். குடகு மாவட்டத்தில் உள்ள துபரே யானைகள் முகாமிற்கு சென்ற நிலையில், காவிரி ஆற்றில் யானைகள் குளிப்பதை வேடிக்கை பார்த்துள்ளனர்.
அப்போது திடீரென யானைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கஞ்சன் என்ற யானை மார்தாண்டா என்ற யானையை கடுமையாக தாக்கியது. இதில் மார்தாண்டா யானை நிலை தடுமாறி ஜூனேஷ் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிதாப்பூர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த அசம்பாவிதத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடகா வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கவும், வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் எவ்வளவுதான் நன்கு பயிற்சி பெற்றிருந்தாலும், எந்தவொரு குறிப்பிட்ட தருணத்திலும் அவற்றின் நடத்தையை முன்கூட்டியே கணிப்பது கடினமான ஒன்றே என்று கூறியுள்ள வனத்துறை அமைச்சர், யானைகளின் தும்பிக்கையைத் தொடுவதையோ, அவற்றுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுப்பதையோ, அவற்றை நீராட்டுவதையோ அல்லது வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட பிற உணவுப் பொருட்களை அவற்றுக்கு ஊட்டுவதையோ சுற்றுலாப் பயணிகள் செய்யாமல் தடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


