
நிஜத்தில் நடந்த சம்பவங்களை திரைப்படங்களாக பார்த்திருப்போம், ஆனால், நாம் திரையில் பார்த்த கனா படத்தின் கவுசல்யாவைப் போல, நிஜ வாழ்க்கையில் சாதித்திருக்கிறார் கமலினி.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய வீராங்கனையாக ஜொலித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினியை, தமிழ்நாடு மட்டுமல்ல நாடே கொண்டாடுகிறது. மதுரையில் 2008-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி பிறந்த கமலினி, குழந்தைப் பருவத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வமுடன் இருந்தார். பின்னர், அவரது எண்ணம் கிரிக்கெட் மீது மாற, மகளின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் தந்தை குணாளன்.
டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தும் அப்பா, கம்ப்யூட்டர் டிசைனரான அம்மா என சாதாரண குடும்பத்தில் பிறந்த கமலினி, 12 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே வெற்றிகளைக் குவித்தார். மதுரையில் பெரிய அளவில் வசதிகள் இல்லாததால், சொந்த ஊரையும், சொந்த பந்தங்களையும் விட்டுவிட்டு மகளுக்கான குடும்பமே சென்னைக்கு குடிபெயர்ந்தது.
பெண் குழந்தையை விளையாட அனுப்புவதா என்ற ஏச்சு பேச்சுகள் எதையும் காதில் வாங்காததால் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளதாக கமலினியின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் கூறினர். முதலில் பந்துவீச்சாளராக இருந்த கமலினியின் திறமையைப் பார்த்த பயிற்சியாளர்கள் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சிக்கு மாற்றியுள்ளனர். திறமையுடன், கடும் உழைப்பை கொடுத்த கமலினிக்கு கிரிக்கெட்டில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது.
இதனிடையே, கமலினியின் அப்பா குணாளனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனது தந்தை ஐசியுவில் இருந்த போது ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் சதமடித்தார் கமலினி. வலியுடன் வந்த அந்த சதம், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாட வேண்டும் என்ற கமலினியின் கனவை நனவாக்கியது.
இடதுகை வீராங்கனையான கமலினி அடித்த சிக்ஸர்களின் வீச்சு அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அதற்கு சான்று தான் மகளிர் பிரீமியர் லீக் ஏலம். 10 லட்சத்தில் தொடங்கிய ஏலத்தில் ஒரு கோடியே 60 லட்சத்திற்கு கமலினியை மும்பை அணி வாங்கியது. சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத, 16 வயதே நிரம்பிய கமலினி இவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதனுடன், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்து உலகக்கோப்பையில் விளையாடிய கமலினி, இரண்டு அரைசதங்களுடன் 7 போட்டிகளில் 143 ரன்கள் எடுத்தார். குறிப்பாக அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் 56 ரன்கள் குவித்த கமலினி, இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல வழிவகுத்தார்.
இறுதியில் இந்திய அணி பெற்ற வெற்றி, இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. தடைகளைத் தகர்த்து முன்னேறிய கமலினிக்கும். அவரை வளர்த்தெடுத்த பெற்றோருக்கும் மிகப்பெரிய வெற்றியே. தன்னை செதுக்கியதில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது என பெருமையுடன் கூறும் கமலினி, இன்னும் பல உயரங்களை அடைவார் என்பது உறுதி.
February 09, 2025 4:11 PM IST

