Last Updated:
Delhi Election 2025 | டெல்லியின் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, விஜேந்தர் குப்தா, மஜிந்தர் சிங் சிர்சா, ஹரிஷ் குரானா, பன்சுரி ஸ்வராஜ் மற்றும் ஸ்மிருதி இரானி முன்னிலையில் உள்ளனர்.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சராக யார் பதவியேற்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் முன்னிலையில் இருப்பவர், புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாகிப் சிங் வர்மா. முன்னாள் முதலமைச்சர் சாஹிப் சிங் வர்மா-வின் மகனான பர்வேஷ் வர்மா, மேற்கு டெல்லி தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டவர். மிகவும் அறியப்பட்ட ஜாட் இனத் தலைவரான பர்வேஷ் வர்மா, டெல்லி பாஜக-வில் மிகவும் பிரபலமானவர்.
ரோஹிணி தொகுதியில் வெற்றிபெற்றுள்ள விஜேந்தர் குப்தாவும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியை தக்கவைத்த விஜேந்தர் குப்தா, டெல்லி பாஜக தலைவராக பதவி வகித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
ரஜோரி கார்டன் தொகுதியில் வெற்றிவாகை சூடிய மஜிந்தர் சிங் சிர்சாவும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியிலிருந்த அவர், 2019-ஆம் ஆண்டில் பாஜக-வில் இணைந்தார்.
டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானாவும் போட்டியில் உள்ளார். டெல்லி பாஜக-வில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள அவர், செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சுரி ஸ்வராஜுக்கு முதலமைச்சர் பதவிக்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் முதல்முறையாக கடந்த ஆண்டு வெற்றிபெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், பாஜக-வின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
Delhi,Delhi,Delhi
February 09, 2025 7:07 AM IST
Delhi Election 2025 | டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? – ரேஸில் முன்னணியில் இருக்கும் வாரிசு அரசியல்வாதிகள்!


