பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 7-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 25 ரன்களில் வீழ்த்தி உள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்தப் போட்டியில் ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி, அதிரடியாக பேட் செய்து 43 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார்.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி, பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. ஷெபாலி, 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அலைஸ் கேப்ஸி, 46 ரன்கள் எடுத்தார். ஜோனாசென் 36 ரன்களும், மரிசான் கேப் 32 ரன்களும் எடுத்தனர்.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் சோஃபி டிவைன் இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சோஃபி டிவைன், 23 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட் செய்த ஸ்மிருதி, 43 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து வெளியேறினார். 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது ஆர்சிபி.
20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது ஆர்சிபி. அதனால் 25 ரன்களில் டெல்லி வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணி எதிர்கொண்டுள்ள முதல் தோல்வியாக இது அமைந்தது. 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை அந்த அணி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் அந்த அணி உள்ளது.