கடந்த சில வருடங்களாக மொபைல் போன் பயன்படுத்தி யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி இந்தியர்களிடம் அதிகரித்து வருகிறது. சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யூபிஐ வசதி இருப்பதால் இப்போதெல்லாம் சிலர் வெளியே செல்லும் போது கூட கைகளில் பணம் எடுத்துச் செல்வதில்லை.
ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நமக்கு பலவற்றை எளிமைப்படுத்தி தந்தாலும் இதில் சில பிரச்சனைகளும் இருப்பதை நாம் சொல்லியே ஆக வேண்டும். உதாரணத்திற்கு நம் நண்பருக்கு பணம் அனுப்புவதற்குப் பதிலாக அவசரத்தில் தவறுதலாக வேறொரு நபருக்கு பணம் அனுப்பிவிடுவோம். ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் இந்தப் பணத்தை திரும்ப பெறுவது மிகவும் கடினமாகும். ஒருவேளை நாம் தவறுதலாக பணம் அனுப்பிய நபர் பெரிய மனது வைத்து பணத்தை திரும்ப அனுப்பினால் மட்டுமே இது நமக்கு கிடைக்கும்.
தவறுதலாக வேறொரு எண்ணிற்கு பணம் அனுப்புவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) சமீபத்தில் பிரபல சமூக ஊடகமான X தளத்தில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளது. யூபிஐ வழியாக பணம் அணுப்பும் போது நாம் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். ஒருவேளை தவறுதலாக பணம் அனுப்பும் பட்சத்தில் அதனை திரும்ப பெற எங்ககளால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே எப்போதும் பணம் அனுப்புவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு தடவை சரி பார்த்துவிட்டு அனுப்புங்கள். இது சம்மந்தமாக உதவி தேவைப்பட்டால் உங்களுடைய வங்கியை தொடர்பு கொள்ளுங்கள் என அந்தப் பதிவில் NPCI விளக்கமளித்துள்ளது.
பொதுவாக போன் எண் மூலம் எளிதாக பணம் செலுத்தபடுவதால், ஒரு எண் மாறினால் கூட வேறொரு நபரின் கணக்கில் பணம் சேர்ந்துவிடும் அபாயம் உள்ளது. ஆகையால் நாம் சரியான நபருக்குதான் பணம் அனுப்புகிறோமா என 100 சதவிகிதம் உறுதியான பிறகே பணம் செலுத்த வேண்டும் என்பதை இந்தப் பதிவு உறுதிப்படுத்தியுள்ளது.
சரி, ஏதோ அவசரத்தில் இன்னொரு நபருக்கு பணம் அனுப்பிவிட்டீர்கள். இப்போது என்ன செய்வது? பதற்றப்படாமல் யாருக்கு பணம் சென்றதோ அவரை தொடர்பு கொண்டு, தவறுதலாக அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப தருமாறு கேளுங்கள். ஆனால் தன்னிடம் பணம் வரவேயில்லை என்று அந்த நபர் சொல்வதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளது. ஏனென்றால் பலர் இதுபோல் மோசடி செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.
ஒருவேளை தவறுதலாக பணம் பெற்ற நபர் பணத்தை திரும்ப தர மாட்டேன் எனக் கூறினால், உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் இதற்கு உதவி செய்ய வாய்ப்புள்ளது. தற்போது இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
யூபிஐ மூலம் பணம் அனுப்பினால் 4 மணி நேரம் தாமதமாக சென்றடையம் வசதியை கொண்டு வர வேண்டும் என்றும் அப்போதுதான் தவறுதலாக அனுப்பினால் கூட பணத்தை திரும்ப பெற முடியும் என்ற யோசனையை சிலர் முன்வைத்துள்ளார்கள். ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு செய்தால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…