Toll Pass விதிமுறைகளில் முக்கிய மாற்றம்: இனி சுங்கச்சாவடிகளில் பாஸ் கிடைக்காது என அறிவிப்பு..!!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை மேலாண்மை செய்யும் நிறுவனங்களுக்கு வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்துவது கட்டாயம். இந்த சுங்க கட்டணம் மற்றும் பாஸ் விதிமுறைகளில் அவ்வப்போது மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு, குறிப்பாக சுங்கச்சாவடி அருகே வசிப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கி.மீ சுற்றளவில் வசிக்கும் மக்கள், தங்கள் வாகனங்களுக்கான லோக்கல் பாஸ்-ஐ ராஜமார்க்கயாத்ரா (Rajmargyatra) மொபைல் செயலி மூலம் ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. தற்போது பல சுங்கச்சாவடிகளில் மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ எனப்படும் தடையற்ற சுங்க கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில், வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

அதாவது தானாகவே வாகன எண், ஃபாஸ்டேக் உள்ளிட்டவற்றை ஸ்கேன் செய்து கொள்ளும். இதனால் ஒவ்வொரு வாகனமும் ஃபாஸ்டேக் ஸ்கேனுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த முறையின் கீழ் சுங்க கட்டணம் செலுத்தாத வாகனங்களுக்கு தானாகவே இ-நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. சுங்கச்சாவடி அருகே வசிப்பவர்கள் பலரும் பாஸ் இல்லாமல் சென்று வந்ததால், இவர்களுக்கு அதிக அளவில் அபராத நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது.
இந்த பிரச்சினையை தவிர்க்கவே இந்த டிஜிட்டல் பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்பு, உள்ளூர் மக்கள் சுங்கசாவடி அலுவலகத்திற்கு நேரில் சென்று, தங்களின் குடியிருப்பு சான்றிதழ் மற்றும் வாகன ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ் பெற வேண்டியிருந்தது. இனி ராஜமார்க்கயாத்ரா செயலி மூலம் இந்த செயல்முறையை சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் முறையில் முடிக்கலாம்.
இந்த செயலி பயனரின் VAHAN தரவுத்தளத்தில் உள்ள முகவரி, வாகன எண் மற்றும் பாஸ்டேக் விவரங்களை சரிபார்த்து, தகுதியின் அடிப்படையில் பாஸை வழங்கும். இந்த டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதி முதற்கட்டமாக, டெல்லியில் உள்ள முண்ட்கா-பக்கர்வாலா சுங்கச்சாவடியில் அறிமுகமாகியுள்ளது. வ்ரைவில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த வசதி படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் அல்லாத வாகனங்களை வைத்திருக்கும் உள்ளூர்வாசிகள், மாதத்திற்கு 350 ரூபாய் செலுத்தி இந்த லோக்கல் பாஸை பெறலாம். இதன் மூலம் அந்த மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த சுங்கச்சாவடி வழியாக தடையின்றி பயணம் செய்யலாம். தமிழகத்தில் நெமிலி , செனசமுத்திரம் மற்றும் பரனூர் உள்ளிட்ட பல சுங்கச்சாவடிகளில் தடையற்ற சுங்க வசூல் முறையை செயல்படுத்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே விரைவில் இங்கும் ஆன்லைனில் பாஸ் பெறும் முறை நடைமுறைக்கு வர உள்ளது. சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் இனி அலைச்சல் இல்லாமல் செயலி வழியாகவே பாஸ் பெற்று பயனடையலாம்.

