
டி.கே.ஜி. கபில
ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mikhail Murashko), மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (03) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் அந்நாட்டின் சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் எழுவர் அடங்கிய தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து புறப்பட்ட ஏரோபுளோட் (Aeroflot) விமான சேவைக்குச் சொந்தமான எஸ்.யு. 288 (SU-288) எனும் விமானம் மூலம், இன்று (03) காலை 10:20 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.
விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையில் இத்தூதுக்குழுவினரை வரவேற்பதற்காக, விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜாகாரியன் (Levan Dzhagaryan) உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
இவ்விஜயத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாட உள்ளனர்.
அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களுக்கும் அவர்கள் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர்.







