தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது; அதோடு, கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்களிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் திகதி 17-வது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தேர்தலை முதல் முறையாகச் சந்தித்த த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது.
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 35 பேர் இடம்பெற்றிருந்தனர். இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 2 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்குத் தலா ஒரு இடமும் வழங்கப்பட்டன.
முதல்-அமைச்சரிடம் அறிக்கை அளிப்பு
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆகும் நிலையில், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் செயல்பட்ட விதம், துறை சார்ந்த அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்கள், சொந்த தொகுதியில் மேற்கொண்ட பணிகள், சட்டமன்றச் செயல்பாடு, த.வெ.க.வினரிடம் நடந்துகொண்ட விதம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, முதல்-அமைச்சர் விஜய்யின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அறிக்கை அளித்துள்ளனர்.
அந்த அறிக்கையில், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் துறைச் செயலாளர்களை அழைத்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.
அமைச்சரவை மாற்றம்
இந்த நிலையில், சுமார் 1 மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை(08) முடிவடைந்த நிலையில், அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், த.வெ.க.வில் ஒரு பெண் அமைச்சர் உள்பட 3 பேர் மாற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது.
இதேபோல், கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களில் ஒருவருக்கு இலாகா மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், த.வெ.க. அமைச்சர்களில் ஒருவர் தனக்கு பெரிய துறை வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால், அவருக்கும் இலாகா மாற்றப்படும் என்று தெரிகிறது. அமைச்சரவை மாற்றப்பட உள்ளதால் பல அமைச்சர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

