டில்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
டில்லி மாளவியா நகரில், ‘ஃபிளரிஷ் ஸ்டே’ ஹோட்டல் இயங்கி வருகிறது. மருத்துவச் சிகிச்சைக்காக டில்லிக்கு வந்திருந்த வெளிநாட்டினர் உட்பட 40 இற்கும் மேற்பட்டோர் இந்த ஹோட்டலில் தங்கியிருந்தனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், 5 மாடிகளைக் கொண்ட ஹோட்டலின் தரை தளத்தில் இயங்கி வந்த உணவகத்தில் நேற்று காலை 8.50 மணியளவில் திடீரென தீப்பற்றியது. பின்னர் அருகில் இருந்த ‘மிகாசா இன்’ என்ற ஹோட்டலுக்கும் தீ பரவியது.
தகவல் கிடைத்தவுடன் டில்லி தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன், டில்லி பொலிஸ், பேரிடர் மேலாண்மை ஆணையம் (டி.டி.எம்.ஏ), விபத்து மற்றும் காயங்கள் சேவை அமைப்பு (கேட்ஸ்), நோயாளர் காவுவண்டி சேவைகள் மற்றும் பிற அவசர கால உதவி முகமைகளின் குழுக்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கின.
மீட்புப் பணியின் போது வெளிநாட்டினர் உட்பட 21 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் வெளிநாட்டினர் என்றும் 10 பேர் இந்தியர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.
தீயில் இருந்து தப்பிக்க பலர் ஹோட்டல் மாடிகளில் இருந்து கீழே குதித்தனர். இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. (a)


