தெற்காசிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்: சர்வதேச அரங்கில் அங்கீகாரம்! தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்த உயர்மட்ட மாநாடு, தெலுங்கானா மாநில அரசு ஏற்பாட்டில் துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தெலுங்கானாவின் அழைப்பும் கலந்துரையாடலும்: தெற்காசியப் பிராந்தியத்தில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தெலுங்கானாவை ஒரு முக்கிய மையமாக மாற்றும் நோக்கில், கொள்கை முடிவுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இந்த மாநாட்டில் உலகளாவிய தலைவர்கள் பங்கேற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானின் முந்தைய கால நிர்வாகத் திறன்களையும், அவர் முன்னெடுத்த வெற்றிகரமான வேலைத்திட்டங்களையும் கருத்திற்கொண்டு இம்மாநாட்டில் பங்கேற்க விசேட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

செந்தில் தொண்டமானின் சாதனைகள் – ஒரு பார்வை: இக்கட்டான சூழல்களில் தெளிவான முடிவுகளை எடுத்து, அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்திய செந்தில் தொண்டமானின் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாகச் சாதனைகள் சர்வதேச அரங்கில் பலராலும் கவனிக்கப்படுகின்றன:
நிர்வாகத் திறமை: 2009-ல் மின்சார அமைச்சராக இருந்தபோது, 61 ஆண்டுகளாக மின்சார வசதியற்றிருந்த பதுளை மாவட்டத் தோட்டப் பகுதிகளுக்கு முழுமையான மின்சார வசதியை வழங்கினார்.

கல்வி அமைச்சராக இருந்தபோது, உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கும் புதிய ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
மக்களுக்கான வீட்டுவசதி மற்றும் சமூகநலம்: 2013-ல் இந்திய அரசின் ஒத்துழைப்புடன் மலையகத்திற்கான முதல் வீடமைப்புத் திட்டத்தைப் பெற்றுத் தந்தார். சமூக சேவை அமைச்சராக 15,000 முதியவர்களுக்கு ‘பின்படி’ ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
பொருளாதார நெருக்கடி காலத்தில் உதவி: இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு பில்லியன் டொலர் நிதி உதவியைப் பெற்றுக்கொடுத்தார்.
மேலும், கோவிட்-19 காலத்தில் தனிப்பட்ட முறையில் 40,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும், தமிழக அரசின் ஒத்துழைப்புடன் கப்பல் மூலம் உணவுப் பொருட்களையும் பெற்றுத் தந்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பணி: கிழக்கு மாகாண ஆளுநராக இருந்தபோது, இந்தியாவில் வசித்த இலங்கை அகதிகளுக்கு அங்கேயே கடவுச்சீட்டு வழங்கும் திட்டத்தை ஜனாதிபதியின் அனுமதியுடன் அறிமுகப்படுத்தினார்.
மேலும், போருக்குப் பிந்தைய சூழலில் 10,000-க்கும் அதிகமானோருக்குக் காணிகளை விடுவித்து வழங்கியதோடு, உள்ளூராட்சி உறுப்பினர்களுக்குப் பலகாலம் வழங்கப்படாமல் இருந்த நிரந்தர நியமனங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
இவரது தொடர்ச்சியான சமூக சேவைக்காக உலக சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆளுமைமிக்க செயற்பாடுகளை முன்னெடுத்ததன் விளைவாகவே, தெலுங்கானா அரசு இவரை இம்மாநாட்டிற்கு அழைத்து, அவரது ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முன்வந்தது. இம்மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

