
கேரள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்றது. இதையெடுத்து, காங்கிரஸ் சார்பில் முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், கட்சி மேலிடப் பார்வையாளர்கள் முன்னிலையில் வியாழக்கிழமை (07) நடைபெற்றது.
இதற்காக, காலை 10 மணி முதலே திருவனந்தபுரத்திலுள்ள காங்கிரஸ் தலைமையகமான ‘இந்திரா பவனுக்கு’ எம்.எல்.ஏ-க்கள் வரத் தொடங்கினர். அவர்களைக் காங்கிரஸ் முக்கிய பிரமுகரான செரியான் பிலிப், பிரதான வாயிலில் நின்றபடி வரவேற்றுக்கொண்டிருந்தார். அப்போது, காங்கிரஸ் சார்பில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா அங்கு வருகை தந்தார்.
அவரைப் பார்த்ததும் வாயிலில் நின்றுகொண்டிருந்த செரியான் பிலிப், பெண் எம்.எல்.ஏ-வைப் பாய்ந்து கட்டிப்பிடித்து வரவேற்பது போல முத்தம் கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பிந்து கிருஷ்ணா, அவரது கையைத் தட்டிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். ஆனால், செரியான் பிலிப் விடாமல் அவரை மீண்டும் கட்டிப்பிடிக்க முயன்றார்.
இந்தக் காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்தனர். இக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், செரியான் பிலிப்பின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, செரியான் பிலிப் பிரதான வாயிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இச்சம்பவத்தால் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பாகச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

