Last Updated:
மேடையில் வைத்து 98 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் ஆசியை பெற்றுள்ளார் பிரதமர் மோடி. அந்த முதியவர் பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்…
நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 207-ல் வெற்றி பெற்று திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது பாஜக. இந்நிலையில் இன்று பாஜக சார்பில் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் சுவேந்து அதிகாரி.
முன்னதாக வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக முடியாது என்று மம்தா பானர்ஜி அறிவித்த நிலையில், சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். மற்றொருபக்கம், கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சுவேந்து அதிகாரி சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். தொடர்ந்து இன்றைய தினம் (மே 9) காலை 11 மணிக்கு கொல்கத்தாவில் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
நிகழ்ச்சியின்போது பாஜகவின் மிக மூத்த தொண்டர்களில் ஒருவரான 98 வயது மதிக்கத்தக்க மக்னலால் சர்க்காரின் கால்களில் விழுந்து ஆசிபெற்றுள்ளார் பிரதமர் மோடி. இதன் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், யார் இந்த மக்னலால் சர்க்கார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. 98 வயதான மக்னலால் சர்க்கார், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் தேசியவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஆரம்பகால அடிமட்டத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். 1952-ல், இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றும் இயக்கத்தின் போது காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராவார் இவர்.
1980-ல் பாஜக உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்னலால் சர்க்கார் மேற்கு தினாஜ்பூர், ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் மாவட்டங்களுக்கான அமைப்பு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். பின் ஓராண்டுக்குள், அவர் கட்சியில் கிட்டத்தட்ட 10,000 உறுப்பினர்களை பாஜக-வில் சேர்க்க இவர் உதவியதாகக் கூறப்படுகிறது. 1981 முதல், அவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் மாவட்டத் தலைவராகப் பணியாற்றினார். அக்காலத்தில் பாஜக தலைவர்கள் பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரே அமைப்புப் பொறுப்பில் நீடிக்க மாட்டார்கள். ஆனால் இவர் 7 ஆண்டுகள் இருந்தது, அரிதான விஷயமாக கருதப்படுகிறது.
மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, மக்னலால் பற்றி கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தேசியவாதப் பாடல் ஒன்றைப் பாடியதற்காக மக்னலால் சர்க்கார் ஒருமுறை டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க மறுத்து, அதற்குப் பதிலாக நீதிபதி முன்பும் அதே பாடலைப் பாடினார். இதைக்கண்ட நீதிபதியோ மக்னலால் டெல்லியில் இருந்து தன் வீட்டுக்கு திரும்ப முதல் வகுப்பு விமான டிக்கெட்டையும், பயணச் செலவிற்காக 100 ரூபாயையும் ஏற்பாடு செய்யுமாறு சொன்னார்” என்றுள்ளார். இவரிடம் பிரதமர் மோடி இன்று ஆசிபெற்றுள்ளார்.
May 09, 2026 12:52 PM IST


