தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கோர விபத்தைத் தொடர்ந்து, டெல்லி தீயணைப்புப் படையினரால் பாரிய மீட்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அங்குள்ள ‘லெமன் கிரீன்’ என்ற உணவகத்திலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், கட்டிடத்தினுள் பல மக்கள் சிக்கியிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயில் சிக்கியவர்களை வெளியேற்றுவதற்கான மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர்.
அதிகாரிகளின் தகவல்படி, இன்று காலை டெல்லி தீயணைப்புப் பிரிவினருக்கு அவசர அழைப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய, இரண்டு தண்ணீர் வாகனங்கள், இரண்டு பிரம்மாண்ட நீர் விநியோக வாகனங்கள், விரைவுப் பதில் வாகனங்கள் மற்றும் பிற அவசரக்கால உபகரணங்கள் உள்ளிட்ட பல தீயணைப்புப் பிரிவுகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் உபாத்யாய் கூறுகையில்,
“இது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு சம்பவமாகும். காலை 9:00 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. தீ விபத்து குறித்து எங்களுக்குத் தெரிந்தவுடனேயே, ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பையும் முடுக்கிவிடுவதே எங்களது உடனடி நடவடிக்கையாக இருந்தது. பேரிடர் மேலாண்மைக் குழு, மாவட்ட ஆட்சியர் (DM), நிலையப் பொறுப்பதிகாரி (SHO), துணைப் பிரிவு நீதவான் (SDM) மற்றும் மாநகராட்சியின் (MCD) துணை ஆணையர் (DC) ஆகியோரைத் தொடர்பு கொண்டோம். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் நாங்கள் ஒருங்கிணைத்ததுடன், நான் தனிப்பட்ட முறையிலும் சம்பவ இடத்திற்கு வந்திருந்தேன். முறையான விசாரணைக்குப் பின்னரே தீ விபத்துக்கான துல்லியமான காரணம் தெரியவரும். இந்த இக்கட்டான நேரத்தில் உள்ளூர் மக்களும் பெருமளவில் உதவியுள்ளனர்,” என்றார்.
இன்று அதிகாலையில் தீயணைப்புப் பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், கட்டிடத்திலிருந்து 11 பேர் மீட்கப்பட்டு, மத்திய விபத்து மற்றும் அதிர்ச்சி சிகிச்சை சேவைகளின் (CATS) ஆம்புலன்ஸ்கள் மூலம் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதை டெல்லி பொலிஸார் பின்னர் உறுதிப்படுத்தினர்.
மீட்பு நடவடிக்கையின் போது, தீயணைப்பு வீரர்கள் உணவகத்தின் அடித்தளத்திற்குள் (Basement) நுழைந்து, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். நேரு பிளேஸ் (Nehru Place) தீயணைப்பு நிலையத்தின் பிரிவு அதிகாரி ரவீந்தர் சம்பவ இடத்தில் நேரில் சமூகமளித்து, மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.
தீ விபத்து ஏற்பட்ட போது உணவகத்தின் உள்ளே எத்தனை பேர் இருந்தனர் என்ற துல்லியமான விபரம் உடனடியாகத் தெரியவரவில்லை. சேத விபரங்களை மதிப்பிடும் அதேவேளையில், அதிகாரிகள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ எவ்வாறு பரவத் தொடங்கியது என்பது குறித்தும், தீ பாதுகாப்பு விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டதா அல்லது அலட்சியங்கள் காரணமா என்பது குறித்தும் கண்டறிய பொலிஸாரும் தீயணைப்புத் துறை அதிகாரிகளும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


