உலகிற்கு அஹிம்சை செய்தியை கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சர்வதேச அமைதி பாதயாத்திரையில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அமைதி பேரணிக்கு தலைமை தாங்கிய அலுத்கம பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட பிக்குகள் குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மகா போதியின் ஆசீர்வாதத்தை பெற்று, எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி இந்தப் பாதயாத்திரை ஆரம்பமாகவுள்ளது.
அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பமாகும் இந்த பேரணியில், ஸ்ரீ மகா போதியின் புனித அங்கூர் (போதிக் கிளை) ஒன்றும் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அனுராதபுரத்தில் ஆரம்பமாகும் இந்த பாதயாத்திரை தம்புள்ளை புனித நகரம், நாவுல, மாத்தளை, கண்டி, கடுகண்ணாவ, கேகாலை, தோலங்கமுவ, கஜுகம, யக்கல, மஹர மற்றும் களனி ஊடாக பயணித்து, ஏப்ரல் 28ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள மகா சங்கத்தினரிடம், ஸ்ரீ மகா போதியின் புனித அங்கூரை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


